Saturday, September 7, 2013

இப்படித்தான் பல் துலக்க வேண்டும்...

இப்படித்தான் பல் துலக்க வேண்டும்...

தினமும் காலை, இரவு என இரண்டு நேரமும் கட்டாயம் பல் துலக்குவதுதான் இதைத் தடுக்க முக்கியத் தீர்வு. சிலர், கடமைக்கு சில நொடிகளிலேயே பல் துலக்கிவிடுவர். சிலரோ, பிரஷ் தேய்ந்துபோகும் அளவுக்கு அதிக அழுத்தம் கொடுத்து பற்களைத் தேய்ப்பர். இரண்டுமே தவறான விஷயங்கள். அதிக அழுத்தம் கொடுத்தோ, அழுத்தமே இல்லாமலோ பல் துலக்கக் கூடாது. மிதமான அழுத்தம் கொடுத்து (படத்தில் காட்டியிருப்பது மாதிரி) குறைந்தது இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை பல் துலக்க வேண்டும். ஜெல் உள்ள பற்பசையைக் கூடுமானவரைத் தவிர்ப்பது நல்லது. அதில் உள்ள சிலிக்கா பவுடர், பல்லின் எனாமலைப் பாழாக்கிவிடும். பல் துலக்கப் பயன்படுத்தும் பிரஷை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் மாற்ற வேண்டும்.

வாய் துர்நாற்றம் நீங்க....

அஜீரணம், அதிக அமிலத்தன்மை, அதிகப் பித்தம் ஆகியவை வாயில் துர்நாற்றம் ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்கள். இதைப் போக்க சீரகத்தைத் தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்கவைத்து, வடிகட்டி அருந்தலாம். பல் ஈறுகளில் ரத்தம் வடிதல், வாய்ப் புண் ஆகியவற்றாலும் துர்நாற்றம் ஏற்படலாம். இவை ஆரம்ப நிலை சர்க்கரை நோயின் அறிகுறியாக இருப்பதால், அந்தப் பாதிப்பு உள்ளவர்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பரிசோதிப்பது நல்லது. பிரண்டையைத் துவையல் செய்து சாப்பிடுவதன் மூலம் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும். கிராம்பு, ஏலக்காய் போன்ற நறுமணப் பொருட்களை வாயில் அசைபோடலாம். இந்தப் பொருட்கள் துர்நாற்றத்தைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்துவதுடன், அஜீரணத்தையும் குணமாக்கும்.

Friday, September 6, 2013

கார்ன்ஃப்ளெக்ஸ்’ ஊட்டமான உணவுதானா?’

கார்ன்ஃப்ளெக்ஸ்’ ஊட்டமான உணவுதானா?’

தனியார் பள்ளியின் ஆசிரியர் அவர். பள்ளிக் குழந்தைகளிடம், 'காலையில என்ன சாப்பிட்டீங்க?’ என்று கேட்க, பெரும்பாலான குழந்தைகள் 'கார்ன்ஃப்ளெக்ஸ்’ என்று கூறியிருக்கின்றனர். அதிர்ந்துபோய்விட்டார் ஆசிரியர். ''இன்றைக்கு பல வீடுகளில், கார்ன் ஃப்ளெக்ஸ்தான் காலை உணவாக இருக்கிறது. இட்லி, தோசை என நம் பாரம்பரிய உணவைப் பழக்கப்படுத்தாமல், கார்ஃன் ப்ளெக்ஸை மட்டுமே செய்துகொடுப்பது எந்தவிதத்தில் சரி? இதனால், குழந்தைகளோட ஆரோக்கியம்தானே பாதிக்கும்?'' என்கிறார் வேதனையுடன்.

''குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் மக்காச் சோளத்தில் தயாராகும் 'கார்ன்ஃப்ளெக்ஸ்’ ஊட்டமான உணவுதானா?’ என்று சித்த மருத்துவர் சிவராமனிடம் கேட்டோம்.

''நோகாமல் நோம்பு கும்பிடுவது என்பது இதுதான். உணவு விஷயத்தில், எளிதாகச் செய்ய கூடியதாக இருக்க வேண்டும். அதேநேரம் சுவையானதாகவும் சத்தானதாகவும் இருக்க வேண்டும் என்ற நினைப்புதான் பெரும்பாலான பெற்றோருக்கு உள்ளது. குடும்பத் தலைவிகளின் இந்த எண்ணத்தைத் தெரிந்துகொண்டு, உணவு உற்பத்தியாளர்களும் பல்வேறு யுக்திகளைக் கையாள்கின்றனர். அதில் தற்போது 'கார்ன் ஃப்ளெக்ஸ்’தான் சக்கைப்போடு போடுகிறது.


அவல் போலதான் கார்ன் ஃப்ளெக்ஸும். அவல் ஒரு பாரம்பரிய உணவு. சங்க காலத்திலேயே, தயாரிக்கப்பட்ட (Pre cooked food) உணவு. புழுங்கல் நெல்லை, உலக்கையால் இடித்துக் காயவைத்து தயாரிக்கப்பட்டு பல நிலைக்குப் பிறகு அவலாக மாற்றுவார்கள். இப்படி தயாரானாலும், அதில் உள்ள சத்துகள் குறையாமல் இருக்கும். ஆனால், அவலைத் தயாரிக்கும் கால அளவுதான் அதிகம். இன்றைக்கு வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தில், அனைவரும் விரும்பி சாப்பிடும் காலை உணவாகிவிட்ட கார்ன் ஃப்ளெக்ஸ், 'கெலாக்’ என்கிற ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரத்தில் தயாரிக்கப்படுகிறது. அதிக வெப்பத்தில் மக்காச் சோளத்தை வேகவைத்ததும், அதிகபட்ச அழுத்தத்தைக் கொடுத்து, தட்டையாக ஆக்கப்படுகிறது. பிறகு, அதை உலரவைத்ததும் தகடுபோல வரும். இது 120 டிகிரி சென்டிகிரேடில் உலர்த்தப்படுகிறது.

வைட்டமின், தாது உப்புக்கள் தெளிக்கப்பட்டு, கெட்டுப்போகாமல் இருக்க, ஒன்றோடு ஒன்று இணையாமல் இருக்க பிரிசர்வேட்டிவ் சேர்க்கப்படும். மொறுமொறுப்புக்காகவும் அதிக நாட்கள் மனம் சுவை கெடாமல் இருக்கவும் ரசாயனங்கள் சேர்க்கப்படும். இப்படி, அதிக அளவு அழுத்தம், உயர் செயல்முறையில் தயாராகும் கார்ன் ஃப்ளெக்ஸில் புரதம், நார்ச் சத்து போன்ற சத்துகள் போய்விடும். பிறகு, என்னதான் ஊட்டச்சத்துகள் சேர்த்தாலும், அது முழுமையாக இருக்காது. சத்துகள் அதிகம் இருப்பதாக விளம்பரப்படுத்தப்படுகிறதே தவிர, எல்லாச் சத்துகளும் இழந்த ஒரு சக்கைதான் கிடைக்கிறது'' என்ற டாக்டர் சிவராமன், காலை உணவு பற்றிய டிப்ஸ்களை அடுக்கினார்தருகிறார்.

காலை உணவு சத்தானதாக இருக்கவேண்டும். அப்போதுதான் வளரும் குழந்தைகளுக்கு கூர்மையான அறிவு, செயல்திறன் நன்றாக இருக்கும்.

உணவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட கே.டி.அச்சையா என்ற உணவியல் வல்லுநர், 'எல்லா நாட்டு உணவுகளையும் ஆராய்ந்ததில், சிறந்த காலை உணவு இட்லி, தோசைதான்’ என்கிறார்.

இட்லி, தோசை மாவைப் புளிக்கவைக்கும்போது அதில், நல்ல நுண்ணுயிரிகள் சேர்ந்துவிடுகின்றன. இதனால், வயிற்றுக்கு ஜீரணத்தைத் தந்து புற்றுநோய் வராமலும் தடுக்கிறது. அதேசமயம் அதிகம் புளிக்கவைக்கவும் கூடாது. குழந்தை முதல் முதியவர்கள் வரை யாருக்கும் தொந்தரவு இல்லாத உணவும் இவைதான்.

பாக்கெட்டில் விற்கும் மாவை தவிர்த்து, வீட்டிலேயே மாவு அரைத்து பயன்படுத்துங்கள்.

சத்தான உணவு அந்த நேரத்தில் தயாரித்ததாக இருக்க வேண்டும். கார்ன்ஃப்ளெக்ஸ் வாங்குவதைவிட, கைக்குத்தல் அவல், சிவப்பு அரிசி அவல் வாங்கித் தரலாம்.

கார்ன்ஃப்ளெக்ஸ் 200 கிராம் 150 ரூபாய் என்றால், ஒரு கிலோ அவல் 60 முதல் 70 ரூபாய்க்குள் கிடைத்துவிடுகிறது.

கார்ன்ஃப்ளெக்ஸ், ஒரு ஜங்க் ஃபுட் மாதிரிதான். அதில் ஸ்ட்ராபெரி, கோகோ, சாக்லெட் போன்ற சுவையூட்டிகளைக் கலந்து நொறுக்குத் தீனியாகவும் சாப்பிடுகின்றனர். இதில் எந்தப் பலனும் இல்லை.

உதடு சிவப்பாக..

உதடு சிவப்பாக..

புதினா, கொத்தமல்லி இலையை மைய அரைத்து இரவு படுக்கப்போகும் போது உதட்டில் தடவி வர உதடு சிவப்பாக மாறும்.

· கடுகு, எலுமிச்சை பழச்சாறு, கிளிசரின், ரோஸ்வாட்டர் 3 சொட்டு அரைத்து தடவவும்.

· இரவு லிப்ஸ்டிக்கை எடுத்தவுடன் உதட்டின் மேல் கிளிசரின், பன்னீர் இரண்டையும் கலந்து தடவவும்.

· இரவு படுக்கும் முன் உதடுகளை மிருதுவாக்கக்கூடிய வெண்ணை தடவி படுக்க வேண்டும்.

· 15 நாட்களுக்கு ஒரிரு முறை பால் ஆடையுடன் சிறிது தேன் கலந்து உதட்டில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவி விடவும்.

Thursday, September 5, 2013

வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு..!

வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு..!

வாய்வுப் பிடிப்பு, சுளுக்கு இந்த இரண்டுக்கும் சித்த வைத்தியத்தில் முழுமையான நிவாரணம் இருக்கு. இதுக்கான மருத்துவத்தைப் பார்க்கலாம்.

ஒரு கைப்பிடி முடக்கத்தான் இலையை எடுத்து, 3 டம்ளர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்கணும். அதை அரை டம்ளரா சுண்ட வச்சு பெரியவங்களுக்குத் தரலாம். சின்னக் குழந்தைகளுக்கு அரை பாலாடை கொடுத்தாப் போதும். ஒருமுறை இதைச் சாப்பிட்டு வந்தாலே பிரச்னை சரியாகிடும்.

மேல சொன்ன மருந்தைச் சாப்பிடுறதோட, இப்ப சொல்லப் போற வைத்தியங்களில் எது முடியுதோ அதைச் செய்ய சுளுக்கும் வாய்வுப் பிடிப்பும் ஓடியே போயிடும்.

5 கிராம் முருங்கைப்பட்டை, ஒரு கணு சுக்கு, புளியங்கொட்டை அளவு பெருங்காயம், ஒரு டீஸ்பூன் கடுகு எடுத்து, தண்ணி விட்டு அரைச்சு, கூழான பதத்துல கரண்டியில வச்சு சூடு காட்டணும். பின் இளஞ்சூட்டில் அதை சுளுக்கோ, வாய்வுப் பிடிப்போ இருக்குற இடத்துல 'பத்து'ப் போடணும். இதை இராத்திரியில போட்டு, காலையில கழுவிடணும்.

தழுதாளை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து, நாலு லிட்டர் தண்ணியில் போட்டுக் கொதிக்க வைக்கணும். இந்தத் தண்ணியை இளஞ்சூடாக ஆறவிட்டு, வாய்வுப் பிடிப்பு இருக்குற இடத்துல் தினமும் ஊற்ற வேண்டும்.

வாதநாராயணன் இலையும் இதுமாதிரிக் கோளாறுகளைச் சரி பண்ணும். வாதநாராயணன் இலையை ஒரு கைப்பிடி எடுத்து, அதைப் பச்சையா அரைச்சு, வாய்வுப் பிடிப்பு/சுளுக்கு இருக்குற இடத்துல பத்துப் போட்டு 3 மணி நேரம் கழிச்சுக் கழுவணும்.

சுளுக்கு/வாய்வுப் பிடிப்புக்கு இந்த மூணுமே நல்ல மருந்து!

அடிபட்டதால சில பேருக்கு உள்ளுக்குள்ள வீக்கம் இருக்கும். நடக்கவே கஷ்டப்படுவாங்க.. அப்படிப்பட்டவங்களுக்கு அற்புதமான மருந்து குன்றிமணி. காய்ஞ்ச குன்றிமணி விதைகளை இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து, தோலை எடுத்துட்டு, பருப்பை மட்டும் தண்ணியில் ஊற வைக்கணும். காலையில் ஊற வச்சதை சாயங்காலம் எடுத்து அரைச்சு, இரும்புக் கரண்டியில சுட வைக்கணும்.

பிறகு, இதை வீக்கம் உள்ள இடத்தில், இளஞ்சூட்டில் தினமும் இராத்திரி பத்துப் போடணும். இதை நாலு நாள் தேய்ச்சாலே வலியும் வீக்கமும் சரியாகிடும். தேவைப்பட்டால் ஒரு வாரம் கழிச்சுத் திரும்பவும் இதே வைத்தியத்தைச் செய்யலாம்.

சுளுக்கு, அடிபட்ட வீக்கம் இந்த இரண்டுக்கும் பிரண்டை நல்ல மருந்து. ஒரு கணு பிரண்டை, சிறு துண்டு மஞ்சள், கால் ஸ்பூன் உப்பு, புளியங்கொட்டை அளவு புளி எடுத்து, நல்லா அரைச்சு, சுட வச்சு, கூழ் பதமானதும் இளஞ்சூட்டுல் பூசி வந்தா நல்ல சுகம் கிடைக்கும்.

Wednesday, September 4, 2013

தூக்கத்தைக் கெடுக்கும் உணவு.!

தூக்கத்தைக் கெடுக்கும் உணவு.!

மனித வாழ்க்கையில் தூக்கம் என்பது அத்தியாவசியம். ஒருவரின் தூக்கம் அவரது வேலையில் பிரதிபலிக்கிறது.

குறைவான அல்லது இடையூறான தூக்கம் என்றால் அது வேலையைப் பாதிப்படையச் செய்யலாம். அல்லது மற்றவர்களுடன் நீங்கள் பேசும் உரையாடலானது தூக்கமின்மையால் பாதிப்புக்குள்ளாவதோடு, கவனத்தையும் சிதறச் செய்யும்.

தூக்கத்தின் போது உடல் மற்றும் மூளைக்கும் ஓய்வு கிடைக்கிறது. இதன் காரணமாகவே காலையில் தூங்கி எழுந்ததும் பிரஷ் ஆகவும், களைப்பின்றியும் இருக்கிறோம்.

தூக்கத்தின் தேவை என்பது ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது. சராசரியாக சுமார் 7 மணி முதல் 8 மணி நேரம் வரை தூக்கம் அவசியமாகிறது.

நீங்கள் உரிய அளவு தூக்கத்தை மேற்கொண்டீர்களா என்பதை அடுத்த நாள் உங்களின் வேலை மற்றும் நீங்கள் உணர்வதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

அதிக அளவு தூக்கமும், மிகவும் குறைவான அளவு தூக்கமும் மிகவும் களைப்பையும், எரிச்சலையும் தரும். தூக்கத்தின் போது தான் வளர்ச்சிக்கான ஹார்மோன் சுரக்கும் என்பதால், குழந்தைகள், சிறியவர்கள், டீன் - ஏஜ் வயதுடையோருக்கு பெரியவர்களைக் காட்டிலும் அதிக நேரம் தூக்கம் தேவைப்படும்.

வயதானவர்களுக்கு அதிக நேரம் தூக்கம் தேவையில்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளனர்.

வயது வந்த பெரியவர்களுக்கு நிலையான நீடித்த தூக்கம் என்றால், வயது முதிர்ந்தோரின் தூக்கத்தின் அளவு மாறுபடுகிறது. வயதானவர்களைப் பொருத்தவரை இரவில் அடிக்கடி முழித்துக் கொள்ளும் வழக்கம் கொண்டவர்களாக உள்ளனர்.

பொதுவாக தூக்கம் உடலில் ஏற்படுவதற்கான சரியான காரணங்கள் என்று எதுவும் அறிவியல்பூர்வமாக தெளிவுபடுத்தப்பட வில்லை.

நம் உடலில் கடிகாரம் போன்று சுழற்சி முறையின் அடிப்படையிலேயே தூக்கமும் ஏற்படுகிறது. உடலில் நிகழும் சில ரசாயன மாற்றங்களாலும் தூக்கம் தூண்டப்படுகிறது. மேலும் நாம் உண்ணும் உணவு ஒரு முக்கியக் காரணமாகிறது.

தூக்கத்தைப் பாதிக்ககூடிய உணவுமுறைகள் அல்லது வகைகள்:

தூங்கச் செல்லும் முன்பாக லேசான ஸ்நாக்ஸ் எடுத்துக் கொள்வதால் அமைதியான தூக்கம் ஏற்படும். அதே நேரத்தில் அதிக அளவு உணவு சாப்பிடும் பட்சத்தில் அது அஜீரணப் பிரச்சினையாகி தூக்கத்தை பாதிக்கிறது. குறைந்த அளவிலான ஆல்கஹால் எடுத்துக் கொள்வதால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். ஆனால் அதுவே பழக்கமாகி விடும்பட்சத்தில் தூக்கத்தை கெடுக்கும் பிரச்சினையாகி விடுவதும் உண்டு.

உங்கள் ஆல்கஹால், தண்ணீரை இழக்கச் செய்யும் என்பதால் அடுத்த நாள் முழுவதும் உடல் களைப்படைய காரணமாகிறது.

எந்த உணவிலும் காபீன் இருந்தால் அது தூக்கத்தைப் பாதிக்கிறது. என்றாலும் இது அனைவருக்கும் பொருந்துவதில்லை. காபீன் எடுத்துக் கொள்வது உங்களுக்கு ஒவ்வாது என்றால் அவற்றை வயது முதிர்ந்தோர் தவிர்க்கலாம்.

அதிக கொழுப்பு கொண்ட உணவுகளை மாலையிலோ அல்லது இரவிலோ நீங்கள் சாப்பிட்டால், ஜீரணம் பாதிப்புக்குள்ளாகி இருதயத்திற்கும் பாதிப்பு ஏற்படும். உங்களின் தூக்கமும் தடை படலாம்.

இருதய நோய் அல்லது அமில சுரப்பு உள்ளவர்கள் இரவில் வெகுநேரமாகி உண்பதைத் தவிருங்கள். வெறும் வயிற்றுடன் இருந்து அதிகமாக சாப்பிட்டாலோ அல்லது நன்றாக சாப்பிட்ட பின்னரும் இரவில் மீண்டும் சாப்பிட்டாலோ தூக்கத்தின் போது பாதிப்பைத்தரும்.

இரவில் சாப்பிட்ட பின்னர் திரவ உணவு வகைகளை அருந்துவதைத் தவிர்க்கவும். சாப்பிட்டபின் திரவப்பொருட்களை எடுத்துக் கொண்டால் அது சிறுநீருக்காக உங்களை இரவில் எழுந்திருக்கச் செய்யும்.

அமினோ அமிலம் அடங்கிய பால் மற்றும் சிறிதளவு தேன் போன்றவை உங்களின் தூக்கத்தை மேலும் ஊக்கப்படுத்தும். இயற்கையான தூக்கத்தை கட்டுப்படுத்தாதீர்.

பொதுவாக வீட்டுப் பிரச்சினைகளையோ, அலுவலகப் பிரச்சினைகளையோ மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்காதீர்கள். நடப்பவை நன்மைக்கே என்று நினைத்து நேரத்தில் தூங்குங்கள். குறித்த நேரத்தில் எழுந்து விடுங்கள்.

மூளையைத் தூங்க விடாதீர்கள்!

மூளையைத் தூங்க விடாதீர்கள்!

பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

1. கவனமான பார்வை
2. ஆர்வம், அக்கறை
3. புதிதாகச் சிந்தித்தல்

இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சி.

ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள். இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.

இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.

தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாரங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.

இதே போன்று இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப் போடுங்கள். (உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.

இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு புரோகிராம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.

புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அபிப்யாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.

உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.

ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்.